இனிய தூக்கத்திற்கு எருமைப் பால், எருமைத் தயிர், கரும்புச்சாறு, இவற்றை ஜீர்ண சக்தியை ஒட்டி அதிகம் சேர்ப்பது நலம் தரும்.
உடல் சோர்வு நீங்குவதற்கு இதமான வெண்ணீரிலோ குளிர்ந்த தண்ணீரிலோ குளிப்பது நல்லது.
அரிசி மாவில் வெல்லம் கலந்து வேக வைத்து எடுக்கப்படும் இனிப்புப் பண்டம் அரிசி சாதம், உளுந்து போன்றவைகளில் உணவாக அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
உடல் உஷ்ணத்தினால் தூக்கம் வரவில்லை என்றால் ஹிமசாகர தைலம் அல்லது சந்தனாதி தைலம் ஆயுர் வேத மருந்து கடைகளில் கிடைக்கும். உச்சந் தலையில் அரை மணி முதல் முக்கால் மணி வரை பஞ்சில் நனைத்து தலையில் வைத்து ஊரிக்குளிப்பது நல்ல தூக்கத்தைத் தரும்.
உடல் வலியால் தூக்கமில்லை என்றால் தாண்வந்திரம் தைலத்தைத் தலைமுதல் பாதம் வரை சிறிது சூடாகத்தேய்த்து ஒரு மணி நேரம் ஊரிக் குளிப்பதால் உடல் வலி குறைந்து தூக்கம் வரும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் மிளகு ரஸம் அல்லது ஜீரக ரஸம் சுட்ட அப்பளத்துடன் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் சூடாக சாப்பிட வேண்டும்.
உறைந்த தயிரின் மேல் நிற்கும் தெளிந்த நீரை உள்ளங்காலில் அழுத்தி தேய்த்துவிட தூக்கம் வரும். மற்றவர் உதவியுடன் உடலை இதமாக பிடித்துவிடச் சொல்வது, இரவில் மனதிற்கு பிடித்த இனிய சங்கீதம் கேட்பது, தூக்கத்தை வரவழைக்கும் வழிகளாகும.
அதி மதுரத்தையும் ஜீரகத்தையும் சம அளவில் நன்கு பொடித்து துணியில் சலித்து வைத்துக் கொள்ளவும். 2-3, கிராம் அளவில் இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய பூவம் வாழைப்பழத்துடன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
வழக்கமாக தூங்கி விழிக்கும் நேரங்களை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாமல் இருப்பது நல்லது. படுக்கப்போகும்முன் மனக்கவலை, கோபம், துக்கம் முதலிய மனக்கிளர்ச்சி தரும் உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. தலையணையன்றி படுத்தல் நல்லதல்ல. தரைக்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும்படி தலையணை இருக்க வேண்டும்.
நோய் காரணமாகத் தூக்கம் சரியாக வரவில்லையென்றால் அதனை மருத்துவ உதவியால் குணப்படுத்திக் கொள்வது அவசியம்.
Comments
Post a Comment