Skip to main content

நமது பாரம்பரியம் - ஔவை விரதம்.. பெண்களுக்கு மட்டும்

நல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்!
தமிழர்களின் பாரம்பர்ய விழாக்கள், வழிபாடுகள் யாவும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்தவை. தாங்கள் வாழும் நிலத்தைப் பொறுத்தே அவர்களின் வழிபாடுகளும், விரதங்களும் அமைந்துள்ளன. அப்படி உருவான ஒரு விரதம்தான் ஔவையார் விரதம். பெண்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுடைய நலவாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்த இந்த வழிபாடு, பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய முதல் விழா என்று கூடச் சொல்லலாம்.

ஔவையார் விரதம் இருப்பது எப்படி?

திருமணமாகாத பெண்களும், திருமணம் முடித்த சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம் ஔவையார் விரதம். தை, மாசி மற்றும் ஆடிமாத செவ்வாய்க் கிழமைகளில் இந்த விரதத்தினை மேற்கொள்வார்கள். இந்த விரதத்தைப் பற்றி கிராமத்துப் பெண்கள் கூறும்போது, 'மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி' என்று குறிப்பிடுவார்கள். தை மாதம் கடைப்பிடிக்கவேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பார்கள்.
இந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையும், திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தை வரமும் கிடைப்பதுடன், குடும்ப நலமும் மேம்படும் என்பது நம்பிக்கை. பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசியமான நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக் கூட அங்கே அனுமதியில்லை. அவ்வளவு ஏன், அங்கு விநியோகிக்கப்படும் கொழுக்கட்டை பிரசாதத்தைக் கூட ஆண்கள் பார்க்கவோ, உண்ணவோ கூடாது என்பது நடைமுறை. இந்த விரதத்துக்குப் போகக் கூடாது என்று ஆண்கள் தடுத்தால், அந்த ஆணின் கண் பார்வை பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அதுபோலவே இந்த விரதத்தில் எழும்பும் எந்தச் சத்தமும், உரல் சத்தம் உட்பட எதுவும் ஆண்களின் காதுகளில் விழக் கூடாது என்பதும் ஐதீகம்.

தை செவ்வாய் விரதம் விரதம் அனுஷ்டிக்கும் முறை:.
விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால் விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள்.

ஔவையார் விரத கொழுக்கட்டை

ஒரு செம்பு நிறைய நீர்விட்டு, அதற்கு மேல் கலசம் போல ஒரு தேங்காயை வைத்து, அந்தக் கலசத்தில் ஔவையாரை ஆவாஹணம் செய்வார்கள். அந்தக் கலசத்தை வைக்கோல், புங்க இலை, புளிய இலை பரப்பி அதன்மேல் வைப்பர். கொழுக்கட்டை தயாரானதும் ஔவையாருக்குப் படைத்து விளக்கேற்றி வழிபடுவார்கள். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைப்பதும் உண்டு. கைக்குத்தல் பச்சரிசியும், தேங்காயும் மட்டுமே அந்த விரதத்தில் முக்கியப் பொருள்கள். வேறு எந்தப் பலகாரமும் உண்ணக் கூடாது. வழிபாட்டுக்குப் பிறகு விடிய விடிய கதைகளும், பாடல்களும் பெண்களுக்கிடையே தொடர்ந்து நடக்கும். ஏழைப் பெண்ணொருத்திக்கு ஔவையார் உபதேசித்த இந்த விரத மகிமையை அப்போது சொல்லிப் பாடுவார்கள். பாடலுக்கு நடுவே ஒரு பெண் பாத்திரத்தில் குச்சியை வைத்து மெள்ளத் தட்டி ஓசை எழுப்புவார். அந்த இரவில் சொல்லப்படும் கதை சுவாரசியமானது.

அந்தக் கதை...
ஒருமுறை பசியும் தாகமுமாக வந்துகொண்டிருந்த ஔவைப்பாட்டி, வழியில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டுக்குச் சென்ற ஔவைப்பாட்டி, ஏழைப் பெண் ஒருத்தி அந்த வீட்டில் இருப்பதைப் பார்த்தார். அரையாடையோடு இருந்த அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையைக் கண்டு அதன் காரணம் கேட்டார்.
அந்தப் பெண்ணும், தான் ஏழு அண்ணன்மார்களுடன் பிறந்ததாகவும், அவர்கள் கொண்டு வரும் 7 படி நெல்லைக் குத்தினால் கிடைக்கும் ஒரு படி அரிசி போதவில்லை என்றும் கூறினாள்.
அதைக் கேட்ட ஔவைப்பாட்டி, ''உன்னுடைய அண்ணன்மார்களை அவர்களுடைய முதலாளி ஏமாற்றுகிறார்.

உன்னுடைய ஏழ்மையைப் போக்க ஒரு விரதத்தை உனக்குக் கூறுகிறேன். அதைக் கடைப்பிடித்தால் உன்னுடைய ஏழ்மை நிலை மாறும்'' என்று கூறியவர் தொடர்ந்து விரதம் இருக்கும் முறையையும் விவரித்தார்.

''ஆண்கள் யாருக்கும் தெரியாமல், கைக்குத்தல் அரிசியும் தேங்காயும் வைத்து செவ்வாய்க்கிழமை இரவு விரதம் இருக்கவேண்டும். எந்த நிலையிலும் ஆண்களுக்கு இந்த விரதம் கடைப்பிடிப்பது தெரியவே கூடாது'' என்று மறுபடியும் வலியுறுத்திச் சொன்னார். ஔவைப்பாட்டி சொன்னபடியே அந்தப் பெண் விரதம் கடைப்பிடித்தாள். அதன் பிறகு அண்ணன்மார்கள் கொண்டு வந்த நெல்லைக் குத்தியதும், நெல் பொங்கிப்பெருகி வீடெல்லாம் நெல் நிறைந்துவிட்டதாம். பிறகென்ன? செல்வச்செழிப்பு கூடிவிட்டது. இந்த விரதத்தால் அவளும் அவள் அண்ணன்மார்களும் கலயாணம் முடித்து எல்லா நலமும் பெற்று வாழ்ந்தார்களாம் என்று நீளும் அந்தக் கதை. இந்தக் கதையினை வட்டாரம் தோறும் விதவிதமாகக் கூறி அந்த இரவினைக் கொண்டாடுவார்கள் பெண்கள். தென்மாவட்டங்களில் இன்றும் சிறப்பாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தை செவ்வாய் விரத கொழுக்கட்டை

இரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும் இருந்த பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கிருந்த அடையாளங்களை எல்லாம் சுத்தம் செய்வார்கள். கொழுக்கட்டைகளை மீதமில்லாமல் எல்லோரும் உண்டு விடுவார்கள். அடுத்த நாள் விடிந்ததும் வேறு உணவை உண்பதற்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டைகள் முழுவதையும் உண்டுவிட வேண்டும் என்பது ஐதீகம். வைக்கோல், புங்க இலை, புளிய இலை, பூஜை செய்த பூ எல்லாவற்றையும் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள். குளித்துவிட்டு, நிறை குடத்துடன், மஞ்சள், குங்குமம் சூடி, புது வளையல் அணிந்து வாய் பேசாமல் வீடு வருவார்கள். விரதமிருந்த பிறகு வரும் பகலில் யாருக்கும் எதுவும் தங்கள் கையால் கொடுக்க மாட்டார்கள். இந்த விரதம் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் விரதம் என்றும் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

தை செவ்வாய் நோன்பு

ஔவையார் எனப் பெண்கள் கொண்டாடும் தெய்வம் சங்ககாலப் பெண்புலவர் ஔவையாரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும், ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஆதிச்சநல்லூர், குறத்திமலை, முப்பந்தல் போன்ற ஊர்களில் ஔவையாருக்கு கோயில்கள் அமைந்துள்ளன. சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. நம்பிக்கைதானே நன்மைகளின் தொடக்கம்? விரதங்கள் அதற்கான பலன்களை அளிக்கட்டும்.

MG Rajesh🌷எம் ஜீ  ராஜேஷ்
Abba Divine🌷அப்ஹா டிவைன்
Chennai🌷சென்னை
💞👑💮🌿🍓🇮

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...